உணர்வுகள்1 : நொறுங்கிய மனசு
டேய் கார்த்தி , ப்ளீஸ்டா, கடைக்கு போய் பால் வாங்கிட்டு வாடா…
எனக்கு கொஞ்சம் அசதியா இருக்கு தம்பி…
ஏம்மா… நீ ஆபிஸ் விட்டு வரும் போதே வாங்கிட்டு வரலாம் தானே…
எப்பவும் என்ன டார்ச்சர் பண்றதே உனக்கு வேல…
எனக்கு முக்கியமான வேல இருக்கு… என்னால போக முடியாது போ…
அடுத்த நொடி அங்கிருந்து அகன்றான் கார்த்தி…
டார்ச்சர் பண்ற என்ற வார்த்தையை கேட்டவுடன் சரளாவின் மனசு நொறுங்கியது.
இவங்கள பத்துமாசம் சுமந்து கஷ்டப்பட்டத எப்பவுமே நான் டார்ச்சர்னு நினைச்சதும் இல்ல
அப்படி சொன்னதும் இல்லையே…
சரி… இப்போ என்ன செய்யறது?
அம்மா, நான் போய் வாங்கிட்டு வரவா? இந்திரா கேட்டாள்.
அய்யோ, வேணாம் தாயே, உங்கப்பாவுக்கு யாரு பதில் சொல்றது?
நீ போய் படி, நானே வாங்கிக்கறேன்…
சே! ஒரு கடைக்கு கூட நான் போகக் கூடாதா? என் மேல கொஞ்சமும் நம்பிக்கையே இல்ல…
கோபித்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள் இந்திரா.
நம்பிக்கையே இல்ல என்று கேட்ட நொடியில் சரளாவின் மனசு நொறுங்கியது…
இவள் மீது நம்பிக்கை இல்லாமலா இவள் படிக்க வேண்டும் என்ற சொன்ன ஸ்கூல்ல சேர்க்க ராகவனிடம் அவ்ளோ போராடி சம்மதம் வாங்கினேன்…
சரளாவே கடைக்குச் சென்று பால் வாங்கி எல்லோர்க்கும் காபி கலந்து கொடுத்து விட்டு தானும் குடித்தாள்…
கொஞ்ச நேரம் படுக்கலாமா…
மனசு ஏங்கியது…உடல் கெஞ்சியது…
அய்யோ… படுத்தால் அவ்ளோ தான்… காலையில் அப்படி அப்படியே போட்டுவிட்ட பாத்திரங்களும் அன்றைக்கு துவைக்கப்பட வேண்டிய துணிகள்,
பெருக்கப்பட வேண்டிய அறைகள்….
அப்புறம் ராத்திரிக்கு டின்னர்… இவ்ளோ வேலைகளும் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கும் போது எங்க படுக்கறது?
கெஞ்சிய உடலை அதட்டிட்டு ஏங்கிய மனசை சமாதானம் செஞ்சிட்டு இடத்தை விட்டு எழுந்து வெயிட்டிங் லிஸ்ட் வேலைகளில் மூழ்கினாள் சரளா….
ராகவன் வீட்டுக்குள்ளே வரும் போது யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தாள் சரளா…
இந்திரா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்…
கார்த்தி கம்யூட்டரில்…
ராகவனைப் பார்த்ததும் போன்காலை முடித்துக் கொண்டு அவனருகில் வந்தாள்..
ராகவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது…
நான் நாயா பேயா அடிபட்டு வரேன்…
கொஞ்சங்கூட பொறுப்பே இல்லாம
9 மணி வரை எல்லோரும் இங்கே ஜாலியா உக்காந்திருக்கீங்க…
இந்திரா சாதுர்யவாதி… சட்டென்று உள்ளே போய் தண்ணீர் கொண்டு வந்து அப்பாவிடம் தந்தாள்…
9மணி வரை ஜாலியாக என்ற வார்த்தையில் சரளாவின் மனசு நொறுங்கியது.
ராகவன் இப்படி சொல்வது ஒன்னும் புதுசில்ல…
நீ என்ன அதிசயமா வேலைக்கு போறியா? நீ என்ன அதிசயமா குழந்த பெத்துக்கரியா?
ஊர் உலகத்துல யாருமே வேலைக்கு போயிட்டு வந்து வீட்ட பாத்துக்கலயா? என்பவனிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்…
இருந்தாலும் ஆபிஸிலிருந்து வந்தது முதல் வீட்டு வேலைகளையும் முடித்து டின்னர் தயார் செஞ்சது வரையில் யரோட சப்போர்ட்டும் இல்லனாலும் அந்த உழைப்பை அங்கீகரிக்க கூட இங்கே எனக்கு நாதியில்லை என்று நினைக்கும் போது மீண்டும் நொறுங்கியது சரளாவின் மனசு…
-தொடரும்…